புதிய அரசியலமைப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களில், ஒரளவுக்கேனும் அதிகாரப்பகிர்வை கொண்டுவர வேண்டும் என்று விரும்பக்கூடியவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாக இருந்தாலும், அவர் கூட தனக்கும் தன்னுடைய அரசியல் பயணத்துக்கும் இந்த கருமம் பாதகமில்லை என்று கண்டால் மாத்திரமே அதனை கொண்டு வருவாரே தவிர, தனக்கு அதனால் பாதகம் ஏற்படும் என்று அறிந்தால் அவர் கூட அதற்கு எதிரானவராக மாறிவிடுவார் என்று புளொட் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பிருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.புதிய அரசியலமைப்பு பணி இந்த ஆட்சிக் காலம் நிறைவு பெறுவதற்கு முன்னர் முடிவடையுமா? ஏன்று தினக்குரல் சார்பாக தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தென்னிலங்கையின் அரசியல் தலைவர்கள் அனைவரும் அதிகாரப்பகிர்வுக்கு எதிரானவர்கள் என்பதில் மாற்றும் கருத்து இருக்க முடியாது. அந்த அடிப்படையில் 2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன அரசியலமைப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற எந்தவொரு தென்னிலங்கை அரசியல் தலைவருக்கும் அதிகாரப்பகிர்வை வழங்குவதில் சிறு துளியளவு உடன்பாடு கூட இல்லை.
இந்த பணியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களில் ஒரளவுக்கேனும் அதிகாரப்பகிர்வைக் கொண்டுவர வேண்டும் என்று விரும்பக்கூடியவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாக இருந்தாலும், அவர் கூட தனக்கும் தன்னுடைய அரசியல் பயணத்துக்கும் இந்த கருமம் பாதகமில்லை என்று கண்டால் மாத்திரமே அதனை கொண்டுவருவார். தனக்கு அதனால் பாதகம் ஏற்படும் என்று அறிந்தால் அவர் கூட அதற்கு எதிரானவராக மாறிவிடுவார். இன்றைய நிலையில் மிக விரைவில் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் தென்னிலங்கைக் கட்சிகள் இருக்கின்றன. அந்த அடிப்படையில் பார்த்தால் அவர்களுடைய கவனம் அதன் மேல் தான் இருக்கப்போகிறதே தவிர, அதிகாரப் பகிர்வு விடயத்திலோ, அரசியலமைப்பு விடயத்திலோ இருக்கப்போவதில்லை.
அத்துடன் ஜக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மேற்படி கருமத்தில் ஒத்துழைக்க போவதில்லை. இன்று இரு கட்சிகளுக்குமிடையில் பாரிய முரண்பாடுகள் நிலவி வருகின்ற நிலையில், அவர்களுடைய கவனங்கள் எல்லாம் அதன் மேல் இருக்குமே தவிர, தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்குவதிலோ, தமிழர்களுடைய பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதிலோ இருக்கப்போவதில்லை.
தங்களுக்குள் நிலவும் முரண்பாடுகளை களைவதிலும் அடுத்த தேர்தலுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது போன்ற விடயங்களில் தான் அவர்களுடைய கவனம் இன்று இருக்கின்றதே தவிர, இவற்றை எல்லாம் விட்டு விட்டு தமிழர்களுக்கு தீர்வைத் தர அவர்கள் முன்வருவார்கள் என்று நான் நினைக்கவில்லை.