கடும் விசனம் – உறுப்பினர் காண்டீபன்
நகர சபைக்கு சொந்தமான நிலப்பரப்பில் நகர சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவியதிற்கு பதிலளிக்கும் போது புளொட் அமைப்பின் நகர சபை உறுப்பினர் காண்டீபன், இவ்வாறு தெரிவித்தார்
கடந்த ஆண்டு மார்கழி மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நகர சபைக்கு சொந்தமான நிலப்பரப்பில் அத்துமீறி இரண்டு மாடி வியாபார கட்டிடம் ஒன்றினை கட்டியது மட்டும் அல்லாமல் நகர சபையின் செயலாளரினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும்

அதனை பொருட்படுத்தாமல் தன்னுடைய அத்துமீறிய செயற்பாட்டை தொடர்ந்து மேற்கொண்டு வியாபார நிலையத்தினை கட்டி முடித்த அந்த தனி நபருக்கு இன்று மக்களின் நகரத்தின் உயரிய சபை ஆதரவு சலுகை வழங்கியமை எம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன், மக்களால் தேர்வு செய்யப்பட்டவன் என்ற வகையில் மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்.
என்னை பொறுத்த வரையில் நகர சபையின் அன்றாட செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவித்து, உயரிய சபையின் செயலாளரின் கட்டளைகளை உதாசீனம் செய்தவருக்கு மக்கள் மன்றில் ஆதரவு சலுகையின் மறுபக்க மர்மம் என்ன? அதனை மக்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள்.
இதனை முன்னுதாரணமாக கொண்டு இனிவரும் காலங்களில் சட்டத்திற்கு முரணான விடயங்களை வவுனியா நகரில் முன்னெடுக்க முடியும் என்பதற்கு சான்றுபகர்வே இந்த ஆதரவு.
முதல் முறையாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரேரணைக்கு எதிராக எம்மோடு சேர்ந்து வாக்களித்திருந்ததுடன் ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் நகர சபையின் நிலத்தில் அத்துமீறியவருக்கு சார்பாக வாக்களித்துள்ளமை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதுதான் வவுனியா நகரம் இலங்கையின் முன்னுதாரணமான நகரமாக மாற்றும் நகர சபையின் தூர நோக்கமா? எனும் கேள்வியுடன் ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்தார்