ஒரு புறம் வடகிழக்கு இணைப்பைப் பற்றி பேசிக்கொண்டு மறுபுறம் வடகிழக்கு இணைப்பிற்கு எதிரான கட்சிகளுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தாரைவார்த்து கொடுப்பதுதான் உங்கள் கட்சியின் கொள்கையா? என பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் குறித்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையை பின்பற்றி வெற்றி பெற்றவர்கள் யோக்கியமானவர்கள் என்றால் அதில் இருந்து வெளியேறிவிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்க வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் தமிழரசுக் கட்சியின் செயலாளருமாகிய துரைராஜசிங்கம் அவர்கள் அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளை பின்பற்றி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் யோக்கியமானவர்களாக இருந்தால் அந்த பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை பற்றி விமர்சிக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் ஐயா அவர்கள் கூறியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறியக் கிடைத்துள்ளது.
உண்ணையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிலர் இன்று அதன் கொள்கையில் இருந்து விலகிச் செல்வதால்தான் அதன் அங்கத்துவ கட்சி சார்ந்து தேர்தலில் போட்டி இட்டு வெற்றி பெற்றவன் என்ற வகையில் அதனை சுட்டிக்காட்ட வேண்டிய தேவை எனக்கு எழுந்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகள் குறித்து பேசுபவர்கள் இன்று அந்த கொள்கையின் வழி நடக்கின்றார்களா என்பதை ஆராய வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அங்கத்துவ கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களுக்கும், அவர்களுக்கு வாக்களித்த மக்களின் கருத்துக்களுக்கும் செவிசாய்க்காது தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சிலர் தான்தோன்றித் தனமாக செயற்பட்டதன் விளைவே என்போன்றோர். இவ்வாறு பகிரங்கமாக பேசவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
எமக்கு வாக்களித்த மக்களை தொடர்ந்தும் கட்சியின் பெயரால் ஏமாற்ற அனுமதிக்க முடியாது. கிழக்கை பொறுத்தமட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று கூறி சிலர் தங்களது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த மீண்டும் அனுமதிக்க முடியாது.
வடகிழக்கு இணைந்த தாயகம், சுயநிர்ணய உரிமையையுடன் கூடிய சமஷ்டி தீர்வு தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை என்று கூறிவிட்டு மறுபுறம் அதற்கு எதிரான கட்சிகளுடன் தொடர்வுகளை வைத்துக்கொள்வதுதான் நீங்கள் கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையா?
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையை நீங்கள் ஏனைய கட்சிகளுக்கு அடகுவைத்து விட்டு என்னை கட்சியில் இருந்து விலகுமாறு கூறுவது தான் த‌ங்களது யோக்கிய அரசியலா?
தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகளைப் பெற்று கொண்டு கிழக்கு மாகாண சபை தாரைவார்த்து கொடுத்துவிட்டு அதனை நியாயப்படுத்துவதுதான் உங்களது யோக்கிய அரசியலா?
இனிமேல் அவ்வாறு நடைபெறக் கூடாது கிழக்கில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என்று கூறிய என்னை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைக்கு எதிரானவன் என்று ஊடகங்களில் என்னை தாக்குவதுதான் உங்களது யோக்கிய அரசியலா?
அப்படி என்ன நான் தவறாக சொல்லிவிட்டேன்.
வழமையாக நாங்கள் உங்களுக்கு உள்வீட்டிற்குள் சொன்னதை நீங்கள் தட்டிக்களிப்பதனால் தான் கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் மட்டக்களப்பில் பின்னடைவை சந்தித்தோம்.
இரவுடன் இரவாக வேட்பாளர்களை போடுவது. கடைசி நேரத்தில் கட்சி பங்கீடு செய்வது, தேர்தலுக்கான முன்னாயித்தங்களை செய்யாதிருப்பது, தமிழ் தேசியக் கூட்டமைப்பை கட்டமைப்பு ரீதியாக வளர விடாது தடுப்பது போன்ற பல்வேறுபட்ட பிழையான அணுகுமுறையின் காரணமாகவே மட்டக்களப்பில் சில உள்ளூராட்சி சபைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இழந்தது. இது கிழக்கு மாகாண சபை தேர்தலில் நடக்க கூடாது என்று கூறியது தவறா?
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோல்வியடைவது பற்றி உங்களுக்கு கவலை இல்லை உங்களுக்கு தமிழரசுக் கட்சி தோல்வியடைவது குறித்துதான் கவலை என்பது அனைவருக்கும் தெரியும்.
நான் தமிழரசுக் கட்சியின் செயலாளரது எண்ணத்தில் உள்ள கொள்கைகளை வேண்டும் என்றால் மீறியிருக்களாமே தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையை மீறி ஒருபோதும் நடக்கவில்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பற்று கொண்டதன் காரணமாகவே தமிழர் ஒருவர் முதலமைச்சராக வர வேண்டுமென்பதை வலியுறுத்தியுள்ளேன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளை மீறி செயற்பட்டதன் விளைவே கிழக்கில் இன்று மாற்றுக் கட்சிகள் வளர்ச்சி அடைய காரணம்.
எதிர்வரும் தேர்தல்களிலும் இது நடக்க வாய்ப்புள்ளது இது குறித்து சிந்தித்து செயல்பட வேண்டியது தமிழ் கட்சிகளின் கடமை.
நாம் அம்பாறையை இழந்துள்ளோம். திருகோணமலையை இழந்துள்ளோம். தற்போது மட்டக்களப்பை இழந்து வருகின்றோம். இது குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்காதவர்கள் சிலர் என்மீது கொள்கைவாத, இனவாத சாயம் பூசி என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்டவே நினைக்கின்றனர்.
எமக்கான அரசியலை நாமே தீர்மானிக்க வேண்டிய நிலை தற்போது கிழக்கில் உருவாகி உள்ளது.
எனவே கிழக்கு மாகாண இளைஞர்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய காலம் உருவாகி உள்ளது.
என்னை பொறுத்தமட்டில் கிழக்கு மாகாணத்திற்கு ஒரு முதலமைச்சரை பெற்றுக்கொள்வதற்காக கட்சி பேதமின்றி அனைவருடனும் திறந்த மனதுடன் செயற்பட தயாராக உள்ளேன்.
இந்த நேரத்தில் கிழக்கில் தமிழர் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கும் இளைஞர்கள் பொது அமைப்புக்கள் புத்திஜீவிகள் களத்தில் இறங்கி செயற்பட தயாராகுங்கள். தொடர்ந்தும் நாம் காலம் தாழ்த்த முடியாது. நாங்கள் செயற்பாட்டு அரசியலுக்குள் இறங்க வேண்டும். தலைமைகள் கூறும் தீர்வு வரும் போது வரட்டும். அது வரை நாம் காத்துக்கொண்டு இருப்போமானால் தமிழர்களின் கோமணம் உரியப்பட்டு நாம் நடுத்தெருவில் நிற்கவேண்டிய நிலையே ஏற்படும்.
ஆகவே எனது அரசியல் செயற்பாடு குறித்து இதைவிட பல விமர்சனங்கள் எதிர்காலத்தில் ஏற்படலாம் ஆனால் அது குறித்து கவலைப்படாமல் களத்தில் இறங்கி மக்களுக்காக தொடர்ந்தும் நான் பணியாற்றுவேன் என தெரிவித்தார்.