மட்டக்களப்பு படுவான்கரை பகுதியில் 6,500 ஏக்கர் காணிகளை சீனாவுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தளவாயில் இன்று நடைபெற்ற அபிவிருத்தி மற்றும் காணி பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளும் பல்வேறு தேவைகளும் இருக்கின்றன. அந்த தேவைகளை நாங்கள் அனுபவிப்பதாக இருந்தால் எமது இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும். கடந்த மூன்று தசாப்தமாக யுத்தம் நடத்தினோம். இதில் பெருமளவான போராளிகளும் இலட்சக்கணக்கான பொது மக்களும் கோடிக்கணக்கான சொத்துக்களும் இழக்கப்பட்டன. எங்களது நிலம்சார்ந்த இருப்பு மிகவும் முக்கியமானது.

எங்களது நிலங்களை பாதுகாப்பதற்காகவே விலைமதிக்க முடியாத இழப்புகளை நாங்கள் எதிர்கொண்டோம். ஒரு இனம் நான்கு தூண்களை கொண்டே தாங்கி நிற்கின்றது. ஒன்று நிலம், இரண்டு பண்பாடு மற்றும் கல்வி, மூன்று மொழி, நான்காவது பொருளாதாரம். இவற்றிலேயே ஒரு இனத்தின் இருப்பு தங்கியுள்ளது.

இதில் ஒரு தூண் அகற்றப்பட்டாலும் அந்த இனம் அழிந்துவிடும். மட்டக்களப்பு மாவட்டம் கொழும்பினை விட மூன்று மடங்கு பெரிய மாவட்டம். இங்கு அனைத்து வளங்களும் இருக்கின்றது. மட்டக்களப்பின் பொருளாதாரத்தில் எழுவான்கரையில் முக்கியத்துவமானதில் ஒன்று கடல்மீன்பிடி. இன்று இந்த பொருளாதாரத்தினை தமிழ் சமூகம் இழுந்துவருகின்றது. கடற்கரை அண்டிய பொருளாதாரத்தினை நாங்கள் ஏதோ ஒரு விதத்தில் இழந்து வருகின்றோம்.

இதனை கூறுவதற்கு பலர் தயக்கம் காட்டிவருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையினை எடுத்துக்கொண்டால் அங்கு விவசாயம், நன்னீர் மீன்பிடி, கால்நடை வளர்ப்பு ஆகியன பொருளாதாரத்தினை தீர்மானிக்கின்றவையாக இருக்கின்றது. அதனையும் ஒருவகையில் நாங்கள் இழந்துவருகின்றோம்.

படுவான்கரை பகுதியில் அபிவிருத்தி என்ற போர்வையில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது. சீனாவுக்கே படுவான்கரை பகுதியில் 6,500 ஏக்கருக்கு அதிகமான காணியை வழங்க நடவடிக்கையெடுக்கப்படுவதை அறியமுடிகின்றது. அது தொடர்பில் நாங்கள் வேகமான ஆராய்ந்து வருகின்றோம்.

இவ்வாறான நிலையேற்பட்டால் அங்குள்ள பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலையேற்படும். இன்று வனஇலாகா திணைக்களம் தங்களுக்குரிய பகுதியாக அடையாளப்படுத்தி பெருமளவானோரை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். குடியிருப்பு காணி மற்றும் வாழ்வாதார காணிகளை இவ்வாறு தங்களது பகுதியாக அடையாளப்படுத்தி அங்கிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை வனஇலாகா மேற்கொண்டுவருகின்றது.

இன்று படுவான்கரை புல்லுமலை பகுதியில் அப்பகுதி மக்களின் எந்தவித அனுமதியும் பெறப்படாமல் அப்பகுதியில் உள்ள நீரை உறுஞ்சி தண்ணீர்ப்போத்தல் உற்பத்திசெய்யும் தொழிற்சாலையினை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டன. ஆனால் ஜனாதிபதி அது தொடர்பில் இதுவரையில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மரம் ஏறி வீழ்ந்தவனை மாடு ஏறி மிதிப்பது போன்று இந்த நல்லாட்சியை உருவாக்கிய மக்களுக்கு பல்வேறு வகையிலும் வேதனையினை ஏற்படுத்தும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எமது நிலத்தினையும் வளத்தினையும் பாதுகாப்பதற்கு போராடிய சமூகம் தமிழ் சமூகம். போராட்டம் என்பது எங்களுக்கு புதியது அல்ல. இன்னுமொரு போராட்டத்திற்கோ அழிவுக்கோ செல்ல தமிழ் மக்களுக்கு விரும்பம் இல்லை.

ஜனநாய வழியிலேயே நாங்கள் பயணிக்கின்றோம். இன்னுமொரு அழிவுக்கு செல்ல தமிழ் சமூகம் தயாராக இல்லை. தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றினை தீர்ப்பதற்கான நடவடிக்கையினை இந்த அரசாங்கம் செய்யவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.