காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பொதுமக்கள் சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் 14ஆம் திகதி முற்பகல் 9 மணிமுதல் 10.30வரை நெடுந்தீவு ஊர்காவற்றுறை, வேலணை, காரைநகர், யாழ்ப்பாணம், நல்லூர், உடுவில், சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் தெல்லிப்பளை முதலான பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள காணாமல்போனோரின் உறவினர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.

முற்பகல் 10.45 முதல் 12.15 வரை கோப்பாய், சாவகச்சேரி, கரவெட்டி, பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி முதலான பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள காணாமல்போனோரின் உறவுகளுடன் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதையடுத்து, ஊடக சந்திப்பும், சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளது. இதேவேளை, நாளை கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில், முற்பகல் 9.30 முதல் 11.30 வரை காணாமல்போனோரின் உறவினர்களுடனும், 11.45 முதல் 12.45 வரை சிவில் சமூக பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் கூறியுள்ளது.

காணாமல்போனோர் அலுவலகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்-

அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட காணாமல்போனோர் அலுவலகத்திற்கு எதிராக இன்று யாழ்ப்பணாத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையிலான காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தினர் இன்று யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் அமர்வொன்றில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த அமர்விற்கு எதிராகவே காணாமல்போனவர்களின் உறவினர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வீரசிங்க மண்டபத்தின் முன்னாள் கூடியுள்ள காணாமல்போனவர்களின் உறவினர்கள் நாங்கள் இந்த அலுவலகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் மக்கள் எவரும் காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் ஆணையாளர்கள் முன் சாட்சியமளிக்க செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை காணாமல்போனவர்களின் உறவினர்கள் வீரசிங்க மண்டபத்திற்குள் சென்று ஆணையாளர்கள் முன்னிலையிலும் தங்கள் எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டு வருகின்றனர்.