புளொட்டின் 29ஆவது வீரமக்கள் தின நிகழ்வு இன்று 15.07.2018 ஞாயிறு மாலை 3.00 மணியளவில் பிரான்ஸின் Salle Maxime Jobert , 21 Bis rue villot 93120 la Courneuve , Tram 1 : arrêt – Hôtel de Ville de La  Courneuve என்னுமிடத்தில் தோழர் இளையதம்பி கந்தசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் புளொட் தோழர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்களுடன், புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் கணேசலிங்கம் (வெள்ளையன்), தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் உதயகுமார் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் பிரதிநிதியும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மௌன அஞ்சலி இடம்பெற்று மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் உரைநிகழ்த்திய புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இலங்கையில் தற்போதிருக்கின்ற நிலைமையில் ஒரு நியாயமான தீர்வு வருமென்று எதிர்பார்க்க முடியாது. அதேநேரத்தில் இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து இயக்கங்களைச் சேர்ந்த போராளிகளும் இருக்கின்றார்கள். அவர்களுடைய வாழ்வாதாரங்களை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகள் பலர் அங்கவீனர்களாக பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள்.

வெளிநாடுகளில் இருப்பவர்கள் யுத்தத்தை நடாத்துவதற்கு கோடிக்கணக்கான நிதிகளை சேகரித்து யுத்தத்தை தக்கவைத்துக் கொண்டிருந்தார்கள். அதிலே சிறுபகுதி நிதி இருந்தாலே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். அதை அவர்கள் செய்யவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

அதேவேளையில் எமது பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைப்பதற்காக சர்வதேச அழுத்தங்களை உருவாக்குவதற்கு வெளிநாடுகளிலே இருக்கின்ற புலம்பெயர் உறவுகள் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் உள்ளிட்ட பல முக்கியமான விடயங்களிலே மிகவும் தீவிரமாக செயற்பட்டிருந்தார்கள். அதேபோல் அவர்கள் தொடர்ந்தும் தீவிரமாக செயற்பட்டு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை அடைவதற்காக இலங்கையில் இருந்து அதற்கான தீர்வினை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்ற எங்களுக்கு ஒரு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.