புளொட் அமைப்பின் 29ஆவது வீரமக்கள் தின நிகழ்வு மட்டக்களப்பு புகையிரத வீதியில் அமைந்துள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் 15.07.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம், வட மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன்(பவன்), வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்(விசு), முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றல் மௌன அஞ்சலி இடம்பெற்று, தொடர்ந்து கழக செயலதிபர் அமரர் க.உமாமகேஸ்வரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அமரர் அ.அமிர்தலிங்கம், இயக்கங்களின் தலைவர்கள், கழக கண்மணிகளின் உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், கட்சியின் மாநகரசபை உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் பிரதேச சபை தவிசாளர்கள், உப தவிசாளர்கள், கட்சி உறுப்பினர்கள், கட்சியின் வெளிநாட்டுக் கிளை தோழர், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

மேலும் 29ஆவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு சுவிஸ் கிராமம் கோல்ட்பிஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற உமாமகேஸ்வரன் நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் முதலிடத்தைப் பெற்ற இக்னேசியஸ் அணியினரும், ஏனைய மூன்று இடங்களைப் பெற்ற அணயினரும் வெற்றிக்கிண்ணம் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.