புளொட் அமைப்பினால் வருடாந்தம் அனுஷ்ட்டிக்கப்பட்டு வரும் வீரமக்கள் தினத்தின் 29ஆவது வீரமக்கள்தின இறுதிநாள் நிகழ்வு நேற்று (16.07.2018) திங்கட்கிழமை மாலை 4.30மணியளவில் வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் இடம்பெற்றது.

புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்ணணியின் உபதலைவர்களில் ஒருவரும், நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களால் கழகத்தின் கொடி ஏற்றிவைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. மௌன அஞ்சலி, நினைவுச்சுடர் ஏற்றுதல் என்பன இடம்பெற்றதைத் தொடர்ந்து கழகத்தின் ஸ்தாபகரும் செயலதிபருமான அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலி நிகழ்வினைத் தொடர்ந்து மரணித்த போராளிகளின் படங்களை பார்வையிட்ட உறவுகள், பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். நிகழ்வில் கட்சியின் வட மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன்(பவன்), கட்சியின் வட மாகாணசபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன், பா.கஜதீபன், கட்சியின் நகரசபை, மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேசசபை தவிசாளர்கள், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.