முல்லைத்தீவு – முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் தேனீ கொட்டியதில் 40-இற்கும் அதிகமான மாணவர்கள் காயமடைந்துள்ளனர். கல்லூரியின் கட்டடத்திலுள்ள தேன் கூடொன்று கலைந்ததில், இன்றுகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆசிரியர் ஒருவர் உட்பட 42 மாணவர்கள் தேனீ கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆசிரியர் ஒருவர் உள்ளிட்ட 10 மாணவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் கட்டடங்களில் 4 தேன் கூடுகள் காணப்படுகின்றது. பாடசாலைக்கு பின்புறமுள்ள காணியிலுள்ள ஆலமரமொன்றில் சுமார் 11 தேன் கூடுகள் காணப்படுகின்றது. குளவிகள் மற்றும் தேனீக்கள் இயற்கையாகவே இவ்வாறு கூடுகளைக் கட்டுவதால், இயற்கைக்கு முரணாக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க முடியாதுள்ளதாகவும் எனினும், இதற்கான மாற்றுத்திட்டமொன்றைக் கையாள்வது தொடர்பில் ஆலோசித்து வருவதாகவும் முல்லை வலயக் கல்விப் பணிப்பாளர் கூறினார். வித்தியானந்தா கல்லூரியிலுள்ள தேன் கூடுகளை இன்று இரவு அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.