யாழ்ப்பாணம் – கல்வியங்காடு – நாயன்மார்கட்டுப் பகுதியில், குடிநீர் விநியோகப் பணிகளுக்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

யுத்த காலத்தில், முன்னரங்கு காவலரன் அமைத்து இராணுவம் நிலை கொண்டிருந்த குறித்த இடத்தில் இருந்தே, நேற்று (20) மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இருப்பினும், இனங்காணப்பட்ட மனித எச்சங்களை பொருட்படுத்திக் கொள்ளாமல் அங்கு மேற்கொள்ளப்படும் நீர் விநியோகத்தின் நிலக் கீழ் தாங்கி அமைக்கும் நடவடிக்கைகள் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கல்வியங்காடு – நாயன்மார்கட்டுப் பகுதிக்கு கிளிநொச்சி இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்வதற்கான நிலக்கீழ் நீர்த் தாங்கி நிர்மாணிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் இந்திய நிறுவனத்தின் ஒப்பந்தக்காரர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாரிய அளவில் நடைபெற்றுவரும் இப்பணிகளின் போது நேற்று (20) இயந்திர வலு கொண்டு நிலக்கீழ் தாங்கியைச் சுற்றி அகலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன் போது அங்கு சுமார் 3 அடி மண்ணை அகழ்ந்த போது அதற்குள் மனித எச்சங்கள் இருப்பது அவதானிக்கப்பட்டது.

இனங்காணப்பட்ட மனித எலும்பு எச்சங்கள் தொடர்பில் தகவல் சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு ஆரம்பத்தில் அனுமதி முற்றாக மறுக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் இவ்விடயம் தொடர்பில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதான பொருளியளாளருக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த அவர், யாழ். பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் அழைத்திருந்தார். அங்கு வந்த பொலிஸாரும், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையைச் சேர்ந்தவர்களும் மனித எச்சங்கள் தொடர்பில் ஆராய்ந்தனர்.

ஆராய்ந்த பின்னர் இது தொடர்பில் அப்பகுதி கிராமசேவகருக்கு தகவல் வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இதன் பின்னரே குறித்த பகுதியில் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், குறித்த நீலக்கீழ் நீர் தாங்கி அமைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.