இந்திய அரசின் நிதி உதவியுடன் சுவசெரிய அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ் மாநகர சபை மைதானத்தில் இன்றுமாலை இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்தி அம்புலன்ஸ்சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்றைய நிகழ்வில் வடமாகாணம் மற்றும் ஊவா மாகாணத்தில் மேற்படி அம்புலன்ஸ் சேவையில் ஈடுபடும்பொருட்டு 55 நோயாளர் காவு வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென இந்திய மக்களால் இருபத்தாறு மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு 7 அம்புலன்ஸ் வண்டிகளும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 4 அம்புலன்ஸ் வண்டிகளும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு தலா 3 அம்புலன்ஸ் வண்டிகள் வீதமும் வடமாகாணத்திற்கு 21 அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட்டு இந்த அவசர சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன் ஊவா மாகாணத்திற்கு 34 வண்டிகளும் இந்த சேவையின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்றையதினம் இந்த சேவையின் கீழ் பணியாற்றும் சாரதிகள் மற்றும் அவசர மருத்துவ உதவியாளர்கள் ஆகியோருக்கான நியமனப்பத்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங், வடமாகாண முதமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.