மன்னார் பழைய சதொச கட்டடத்தொகுதி இருந்த இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித புதை குழியில் இருந்து, இதுவரையில் 44 மனித எலும்புக் கூடுகள் மற்றும் அவற்றின் உடல் பாகங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

குறித்த இடத்தில் இருந்த கட்டடம் உடைக்கப்பட்டு அங்கிருந்த மண், மன்னார் எமில் நகர் பிரதேசத்திற்கு கொண்டுச் சென்று கொட்டப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி மனித எலும்பு துண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அது தொடர்பில் மன்னார் காவல்துறையினர், மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்ததன் பின்னர், அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன்படி, கடந்த 37 நாட்களாக அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன. அதன்போது 44 முழுமையான மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த பகுதியில் 45 சதவீத அகழ்வு பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக, அந்த அகழ்வு பணியில் ஈடுபட்டுள்ள களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டுள்ளார். மீட்கப்பட்ட 44 மனித எலும்புக் கூடுகளில் சிறுவர்களின் எலும்பு கூடுகளும் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் அகழ்வு பணிகள் தொடர்ந்தும் இடம்பெறும் எனவும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.