வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றும் உத்தேசம் இல்லை என பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார். யாழப்ப்hணம் இந்து கல்லூரியில் இடம்பெற்ற ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் வைத்து பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கில் இருந்து இராணுவம் அகற்றப்படுவதாக பத்திரிகைகளில் தகவல் வெளியாகியிருந்தன. இவ்வாறு ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றனவா என இராணுவத் தளபதியிடமும் வடக்குக்கு பொறுப்பான கட்டளைத் தளபதியிடமும் வடக்கு மாகாண முதலமைச்சரிடமும் வினவப்பட்டது. அவ்வாறான எந்த நடவடிக்கையும் இல்லை என அனைத்துத் தரப்பினராலும் தெரிவிக்கப்பட்டது. வடக்கில் இராணுவத் படையணிகளின் ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் இராணுவ கட்டமைப்புக்குள் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

வடக்கில் இராணுவத்தை அகற்றும் எந்த ஒரு தேவையும் இல்லை. வடக்கின் நிலைமை படிப்படியாக சீரடையும் போது, இராணுவமும் படிப்படியாக அங்கிருந்து அகற்றப்படும் பணிகள் இயல்பாக இடம்பெறும். யாழ்ப்பாணம் என்பது கொழும்பிற்கு அடிமைப்பட்ட பிரதேசம் அல்ல. வடக்கில், மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் கட்டியெழுப்பப்படுவதாக ஊடகங்களின் வாயிலாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

நாட்டில் இனவாதத்தை வலிமைப்படுத்தி மக்களை அச்சமூட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டார். அத்துடன் சில விடயங்களில் அரசாங்கம் பின்னடைவை கண்டுள்ளது. இதன்பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றது. என்றாலும் அந்த குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாணத்தில் நீண்டகாலமாக தொண்டராசிரியர்களாக கடமையாற்றிய 457 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமனக் கடிதங்களை வழங்கிவைத்தார். வடக்கு மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றும் 676 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

அதில் 182 பேருக்கு கடந்த மார்ச் மாதம் நியமனம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், மீதமுள்ள 494 தொண்டர் ஆசிரியர்களில் 457 பேர் மட்டுமே தமது தகைமைகளை நிறைவு செய்த நிலையில் அவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சரும் கலந்து கொண்டிருந்தார்.