கறுப்பு யூலையின் 35ம் ஆண்டு நினைவுதினம் ஜூலை மாதம் 23ம் திகதியாகிய இன்றையதினம் முதல் எதிர்வரும் 27ம் திகதி வரையில் அனுஸ்டிக்கப்படுகின்றது.
வெலிக்கடைச் சிறையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டமை, அதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் தமிழ்மக்கள் படுகொலை, தமிழர்களின் பொருட்கள், சொத்துகள் சூறை, தமிழ்மக்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றம் என்பன அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆட்சியில் அரச இயந்திரத்தின் பூரண அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது. 1983 ஜூலை 23ம் திகதி யாழ். திருநெல்வேலியில் தமிழ் இளைஞர்களின் கெரில்லாத் தாக்குதலில் 13படையினர் பலியானதைத் தொடர்ந்து தமிழ் மக்கள்மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதன்போது ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், பெருமளவிலான தமிழ்மக்கள் தமது உடமைகளையும், சொத்துக்களையும் இழந்து அநாதரவாக்கப்பட்டனர்.
தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இந்த அவலநிலையைத் தொடர்ந்தே இன விடுதலைப் போராட்ட இயக்கங்களில் பெருமளவு தமிழ் இளைஞர்கள் தம்மை இணைத்துக் கொண்டனர். இலங்கையிலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் ஐரோப்பிய நாடுகளிலும், இன்னும் பல்வேறு நாடுகளிலும் கறுப்பு யூலை நினைவு தினம் ஆண்டுதோறும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.