யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மீட்கப்பட்ட மனித எச்சம் தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகள் நாளை சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். செம்மணி நாயனர்மார்கட்டுப் பகுதியில் நீர்பாசன திணைக்களம் அமைத்து வரும் நிலக்கீழ் நீர் தொட்டிக்காக மண் அகழ்வினை மேற்கொண்ட போது அதில் ஓர் பகுதியில் இருந்து மனித எலும்பு எச்சங்கள் வெளிப்பட்டிருந்தன. இம் மனித எச்சங்கள் தொடர்பாக யாழ்.பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அது தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை பொலிஸார் யாழ்.நீதிவான் நீதிமன்றில் சமர்பித்திருந்தனர். இதனடிப்படையில் கடந்த சனிக்கிழமை மாலை சம்பவ இடத்திற்கு சென்ற யாழ்.நீதிவான் சின்னத்துரை சதீஸ்கரன் அங்கு அகழப்பட்ட மண்ணினையும் முழுமையாக பரிசோதனை செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து நேற்றுக்காலை சம்பவ இடத்திற்கு சட்ட வைத்திய அதிகாரி மயூரதன் சென்றபோதும் அவர் தனது பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் எதனையும் யாழ்.பொலிஸார் மேற்கொண்டிருக்கவில்லை.
இதனால் மேற்கொண்டு பரிசோதனைகள் எதனையும் செய்யாது சென்றிருந்தார். அத்துடன் பொலிஸார் ஏற்பாடுகள் எதனையும் செய்யவில்லை என்பது தொடர்பாக நீதிமன்றுக்கும் அறிக்கை ஒன்றினூடாக தெரியப்படுத்தியிருந்தார். இந்நிலையிலேயே நாளை சம்பவ இடத்தில் பரிசோதனைகளை சட்ட வைத்திய அதிகாரி மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.