இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அடங்கிய படகு ஒன்றை அவுஸ்திரேலிய அரசாங்கம் இன்று அதிகாலை திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பீற்றர் டட்டடனை மேற்கோள்காட்டி அந்த நாட்டின் ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டிருக்கின்றன.

இந்த படகில் மொத்தமாக 33 ஏதிலிகள் பயணித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானார்கள் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், ஏதிலிகளின் பிரவேசத்தைக் கட்டுப்படுத்தவும், ஆட்கடத்தற்காரர்களை கைது செய்யவும், இலங்கை பாரிய ஒத்துழைப்பை வழங்கி இருப்பதாக குறிப்பிட்டார். இதற்காக இலங்கையுடன் மலேசியா, மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கும் அவுஸ்திரேலிய நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை அகதிகள் விடயத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இறுக்கமான சட்டத்திட்டங்களை அமுலாக்கியதுடன், ஆறு நாடுகளுடன் மேற்கொண்ட ஒத்துழைப்பு உடன்பாட்டின் அடிப்படையில் இதுவரையில் 600க்கும் மேற்பட்ட ஆட்கடத்தற்காரர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.