விடுதலைப் புலிகள் மீள உருவாக்கம் செய்ய வேண்டுமென்று ஆற்றிய உரை தொடர்பாக விஜயகலா மகேஸ்வரனிடம் கொழும்பு விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று மாலை 4 மணிமுதல் சுமார் மூன்றரை மணித்தியாலயங்கள் இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது.

கடந்த 2ம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பணி ஆரம்ப நிகழ்வில், உரையாற்றிய முன்னாள் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் விடுதலைப்புலிகள் காலத்தில் இடம்பெறவில்லை என்றும், பெண்கள் நிம்மதியாக வாழ வேண்டுமாயின் விடுதலைப் புலிகள் மீள உருவாக வேண்டுமென்ற கருத்துப்பட உரையாற்றியிருந்தார். இந்த உரையின் பின்னர், தென் பகுதியில் பல சர்ச்சைகள் இடம்பெற்றதை தொடர்ந்து, தனது பதவியை இராஜினாமா செய்ததுடன், ஐக்கிய தேசிய கட்சியினால், விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெறுவதுடன், சட்டமா அதிபரினால், விசாரணைக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம், கொழும்பு விசேட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர், அந்த நிகழ்வில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உட்பட யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் கடந்த வாரம் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

அந்த விசாரணையின் இரண்டாம் கட்டமாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் ஆகியோரிடம் அவர்களது அலுவலகங்களில் வைத்து இன்றையதினம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.