பலாலி விமானத்தள காணி கையேற்பு தொடர்பில் சிவில் விமான சேவை திணைக்களத்தின் பணிப்பாளருக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

பிரதமர் கடந்த முறை யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த போது, இதற்கான காணி கையகப்படுத்தல் தொடர்பில் உரிய நிறுவனத்துடன் பேசித் தீர்க்குமாறு கூறியதன் காரணத்தினாலேயே முதலமைச்சரினால் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையத்திற்காக 1950 ஆம் ஆண்டு சிவில் விமான சேவை திணைக்களத்தினால் 141.61 ஹெக்டெயர் காணி முதலில் கையேற்கப்பட்டதாக வட மாகாண முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் 1986 ஆம் ஆண்டு அவசரகால சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சு மேலதிகமாக காணியை கையேற்பதாக அறிவித்ததாகவும், அதன்போது 426 ஏக்கர் காணி கையேற்கப்பட்டதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அதனையடுத்து, 1987 ஆம் ஆண்டு 646 ஏக்கர் மூன்று ரூட் காணி இராணுவத்தினரால் கையகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதாகவும் அவ்வாறு மொத்தமாக 996 ஏக்கர் 3 ரூட் காணி விமான நிலையத்திற்காக கையேற்கப்பட்டதாகவும் வட மாகாண முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை விட மேலும் 6500 ஏக்கர் காணி மேலதிகமாக படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்கு சிவில் விமான சேவை திணைக்களமே காணியை கையகப்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள முதல்வர், இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு வட மாகாண முதலமைச்சர் சில அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.

படையினர் வசமுள்ள 349 ஏக்கர் 3 ரூட் காணியை, சிவில் விமான சேவை திணைக்களம் கையகப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவசரகால சட்டத்தின் கீழ் விமானத்தளம் அமைப்பதற்கு கையகப்படுத்தப்பட்ட காணியையும் உடனடியாக திணைக்களத்திற்கு கையளிக்குமாறு பாதுகாப்பு செயலாளரிடம் கோர வேண்டும் எனவும் சி.வி. விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.

இந்த காணிகளை சிவில் விமான சேவை பணிப்பாளரிடம் கையளித்த பின்னர் இந்திய அரசிடமிருந்து பலாலி விமான நிலைய தளத்தை அமைப்பதற்கான காணி எவ்வளவு என்று அறிந்து அதனை கைவசம் வைத்துக்கொண்டு மிகுதி காணிகளை காணி உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என முதலமைச்சர் கோரியுள்ளார்.

அதன் பின்னர் மேலதிக காணி தேவைப்படுமாயின், அதற்கான கையேற்பு நடவடிக்கைகளை புதிதாக ஆரம்பிக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். படையினர் தற்போது கையகப்படுத்தி வைத்துள்ள காணி, சட்டத்திற்கு புறம்பாக கையேற்கப்பட்டவை எனவும் சிவில் விமான சேவை பணிப்பாளருக்கு வடமாகாண முதலமைச்சர் தெரியப்படுத்தியுள்ளார்.