புளொட் அமைப்பின் 29வது வீரமக்கள் தினம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஐக்கிய இராஜ்ஜிய கிளையின் ஏற்பாட்டில் கடந்த 21.07.2018 சனிக்கிழமை அன்று லண்டன் ஈஸ்ட்காம் நகரில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

விடுதலைப் போராட்டத்தில் தம் உயிரை ஆகுதியாக்கிய கழக கண்மணிகள், அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவுகூரும் அஞ்சலி நிகழ்வாக இந்நிகழ்வு இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து கிளைத்தலைவர் போல் சத்தியநேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனதுரையில், வீரமக்கள் தினம், விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த அனைவரையும் நினைவு கூரும் சிறப்பை எடுத்துக்கூறியதுடன், எமது சந்ததிக்கு நாம் அனுபவித்த துன்பங்களை விட்டுச்செல்லக்கூடாது. எமது பயணம் சமாதானத்தை நோக்கியதாக அமையவேண்டும் என்று குறிப்பிட்டார்.

சுவிஸ் நாட்டிலிருந்து தொலைபேசி ஊடாக உரையாற்றிய கழகத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், போராட்டத்தில் உயிரிழந்தவரகளை நினைவு கூருவதனூடாக, அவர்கள் நேசித்த மக்கள், மகிழ்ச்சிகரமான வாழ்வினை வாழ்வதற்கு நியாயமான அதிகாரப் பரவலாக்கலை பெற்றெடுப்பதற்காக பாடுபடுவோம். இன்றைய நிலைக்கு தனித்து எவரையும் குற்றம் சுமத்திவிட முடியாது என்று கூறினார்.

தொடர்ந்து மகளிர் அணி தோழர் பாப்பா, தனது குடும்பம் புலிகள் அமைப்பினால் கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை நினைவுபடுத்தி கருத்துக் கூறினார்.

தோழர் கேசவன் தனதுரையில், ஆளும் கட்சிகள் இன மத குரோதங்களை தூண்டி விடுவதன்மூலம் பிரித்தாளும் தந்திரத்தை கடைப்பிடிப்பதாகவும், சிங்கள மக்கள் மத்தியில் இதை அம்பலப்படுத்துவதன் மூலம், முழு இலங்கைக்குமான தீர்வொன்றிற்கு அவர்களுடன் இணைந்து செயல்ப்படுவதே இன்றுள்ள ஒரே வழி எனவும் குறிப்பிட்டார்.

தோழர் சார்ள்ஸ் உரையாற்றும்போது, மறைந்த கழக செயலதிபர் உமாமகேஸ்வரன், புலிகள் அமைப்பினால் கடத்தப்பட்ட ரெலோ உறுப்பினர்கள் எண்மரை விடுவிப்பதற்கு உதவியதை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

ரெலோ தோழரும் அரசியல் ஆய்வாளருமான சோதிலிங்கம் தனதுரையில், தமது அமைப்பின் படுகொலையான தலைவர்கள் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் உடல்களை மீட்டு உரிய மரியாதைகள் வழங்கப்படாதமை குறித்து வருத்தம் தெரிவித்தார். அத்துடன் ஒரு தமிழ் கவுன்சில் நிறுவப்படுவதன் ஊடாக அனைவரும் இணைந்த செயற்பாட்டினை வலியுறுத்தினார். அத்துடன் புளொட் அமைப்பின் ஆரம்பகால கட்டமைப்பும், அதன்கீழ் மக்கள் மத்தியில் தோழர்கள் சுதந்திரமான ஒரு புரட்சிகர அமைப்பாக வளர்ந்த ஆரோக்கியமான நிலையையும் நினைவுபடுத்தினார். அத்துடன் 1982,83,84களில் புளொட்டின்’ மே’தின ஊர்வலம் நாட்டில் ஏற்படுத்திய தாக்கத்தையும், சிறப்பையும் கூறியதுடன் போராட்டத்தில் புளொட்டின் பங்கு மறைக்கப்படாமல், ஆவணப்படுத்தப்பட வேண்டியதன் நியாயத்தையும் எடுத்துக் கூறினார்.

தோழர் சுரேஸ் சுரேந்திரன் தனதுரையில், கழகத்தின் ஆரம்பகால நிலைப்பாடுகள், தோழர் சுந்தரத்தின் நினைவுகள், புதியபாதை பத்திரிகை என பல விடயங்களை நினைவு கூர்ந்தார். ஜே.வி.பி அமைப்பு அரசாங்கத்தால் கொடூரமாக அழிக்கப்பட்டதையும், தமிழர்கள் போராட்டம் நசுக்கப்பட்தையும் ஒப்பிட்டதுடன், இன, மத எல்லைகளைத் தாண்டி அனைவரதும் கௌரவமான வாழ்விற்கு இலங்கையர்களாக செயற்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய தோழர் திவான்- தனது தள அனுபவங்களை நினைவு கூர்ந்ததுடன், தமிழ் மக்களின் இழப்பிற்கான அர்த்தத்தினை தேட வேண்டும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியின் நிறைவில் கிளையின் சார்பில் நன்றியுரையை தோழர் மகேசன் வழங்கியதைத் தொடர்ந்து இராப்போசனத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுபெற்றன.