வெளிநாடுகளில் பணியில் ஈடுபடும் இலங்கையர்களில் வருடமொன்றுக்கு 600 பேர் அளவில் மரணிப்பதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்வோரினால் தான் இலங்கைக்கு அதிகளவான அந்நிய செலாவணி கிடைக்கின்றது. ஏழ்மையான மக்கள் வெளிநாடுகளுக்ககு சென்று ஈட்டும் வருமானத்தில் தான் நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் பயணிக்கிறது. இந்த நிலையில், வெளிநாடு சென்றுள்ள தமது உறவினருக்கு ஏதாவது நடைபெற்றால், அது குறித்து எவ்வாறு நடவடிக்கை மேற்கொள்வது என்றுகூட நாட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது. இந்த நிலையில், அமைச்சின் ஊடாக நடமாடும் சேவையை நடத்த தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனூடாக வெளிநாடுகளுக்கு சென்றவர்களின் குடும்பத்தினருக்கு விளக்கமளிப்பதுடன், பிரச்சினைகள் ஏற்படும்போது அதனை அமைச்சின் ஊடாக எவ்வாறு அணுகுவது என்பது குறித்தும் தெளிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேநேரம், வெளிநாடுகளில் மரணிப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பெருமளவான எண்ணிக்கையிலானோர் வெளிநாடுகளில் உள்ளமையினால், வருடத்திற்கு 600 பேர் வரையில் மரணிக்கின்றனர். சவூதி அரேபியாவிலேயே ஒவ்வொரு ஆண்டும் அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளன. இதேநேரம், ஏனைய நாடுகளிலும் பணியாளர்கள் மரணிப்பதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.