மாணவர்கள் கொழும்பில் இன்று முன்னெடுத்த பேரணியைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். மகாபொல புலமைப்பரிசிலை 1,500 ரூபாவிலிருந்து 5,000 ரூபா வரை அதிகரிக்குமாறும் விரிவுரையாளர்களின் வெற்றிடத்தை நிரப்புமாறு கோரியும் மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

புஞ்சி பொரளை – கெம்பல் மைதானத்திலிருந்து இன்று பிற்பகல் ஆரம்பித்த எதிர்ப்பு ஊர்வலம், மருதானை ஊடாக புறக்கோட்டை வரை சென்று ஜனாதிபதி செயலகம் வரை பயணித்துள்ளது. இதனை நிறுத்தும் வகையில் பொலிஸாரினால் லோட்டஸ் வீதி மூடப்பட்டது. எனினும், பொலிஸாரின் தடுப்புக் காவலையும் மீறி மாணவர்கள் செயற்பட்டதால் மாணவர்கள் மீது, பொலிஸாரால் கண்ணீர் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, மாணவர்கள் சிலர் காயமடைந்துள்ளதுடன், மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.