பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 4,000 பட்டதாரிகளை பொதுச் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நேற்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த நேர்முகத் தேர்வில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட 4,000 பேருக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திடடத்தின் ஒரு பகுதியாக பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது இதன் நோக்கமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை மாவட்ட செயலகங்களில் இடம்பெற்றது. கடந்த 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வெளியான அறிவித்தலுக்கு அமைய, விண்ணப்பித்த வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வே நடைபெற்றிருந்தது. அரச சேவைக்காக 52,000 பட்டதாரிகள் தமது அமைச்சில் பதிவு செய்துள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.