நாட்டில் மீண்டும் மரணதண்டனையை நிறைவேற்றுதல் தொடர்பிலான கருத்தாடல் குறித்த, ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கையை நிராகரித்த, அரசாங்கம் ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகைகளை இழப்பதற்கான வாய்ப்பு குறித்து கவலைப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்களான குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டமையால், அந்தச் சலுகை குறித்து கவலைகொள்ளவில்லையென, அமைச்சரவைப் இணை பேச்சாளர்களில் ஒருவரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில், நேற்று (25) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டிருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்த அவர், ‘மரணதண்டனையை நிறைவேற்றும் தீர்மானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக உள்ளார்’ என்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை, மீண்டும் இழக்கும் சாத்தியம் குறித்து அரசாங்கம் கவலைப்படவில்லையா எனக் கேட்டதற்கு பதிலளித்த ராஜித சேனாரத்ன, ‘அது தொடர்பில் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை. எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பில், அரசாங்கம் உறுதியாகவே உள்ளது’ என்றார்.

பாரியளவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட, 19 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவ்வாறானவர்களுக்கு நீதிமன்றத்தின் ஊடாக தண்டனைகளும் விதிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட அவர், அவ்வாறான குற்றவாளிகளே, சிறைச்சாலையில் இருக்கின்ற போதிலும் கடத்தல்களில் ஈடுபடுவதில் தங்களைத் தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறானவர்கள் கட்டாயமாக தூக்கு மேடைக்கு அனுப்பப்படுவார்கள் என்றார்.

‘மரணதண்டனையை நிறைவேற்றும் போது, பலதை இழக்கநேரிடும். அவை தொடர்பில் கவலைகொள்ளத் தேவையில்லை என்பதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக உள்ளார்’ என்றும் சேனாரத்ன மேலும் குறிப்பிட்டார்.

‘மரணதண்டனையை நாட்டில் அமுல்படுத்த அமைச்சரவையால் கொண்டுவரப்பட்ட ஏகோபித்த தீர்மானத்துக்கு இன்று சர்வதேச நிறுவனங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கின்ற போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாம் எடுத்த தீர்மானத்தில் உறுதியான நிலைப்பாட்டிலேயே உள்ளார்’ என்றும் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருட்களை நாட்டுக்கு இறக்குமதி செய்து, பாரிய போதைப்பொருள் வர்த்தக குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் குடு மாப்பியாக்களே மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

அதியுச்ச தண்டனையாக மரணதண்டனை விதிக்கப்பட்ட பலர் சிறைச்சாலையில் உள்ளனர். இவர்களில் சிலர் சிறைச்சாலைக்குள் இருந்துக் கொண்டு தொடர்ச்சியாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, நாட்டில் அதிகரித்துவரும் போதைப்பொருள் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கிலும், போதைப்பொருளற்ற நாட்டை உருவாக்கும் நோக்கிலும், சிறைச்சாலையில் இருந்துக்கொண்டு பாரிய போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கே முதலில் இந்த மரணதண்டனை வழங்கப்படவுள்ளது. இவ்வாறு இனங்காணப்பட்ட 19 பேர் சிறைச்சாலையில் தண்டனைக் கைதிகளாக உள்ளனர் என்றார்.

இதன்போது தொடச்சியாக ஊடகவியலாளர்கள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் சில கேள்விகளை முன்வைத்தனர்.

கேள்வி: போதைப்பொருள் குற்றச் செயல்களுக்கு மரணதண்டனை விதிப்பது சரிதானா?

பதில்: தண்டனை விதிக்கப்பட்டிருந்தும் சிறைச்சாலைக்குள் இருந்துக் கொண்டு போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் எத்தனை பேரது உயிர்கள் கேள்விக்குரியாகின்றன? எனவே, இவ்வாறானர்களுக்கு புனர்வாழ்வளிப்பதைவிட மரணதண்டனை விதிப்பதில் என்ன தவறு இருக்கிறது.

கேள்வி: சிறைச்சாலை அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி சிறைச்சாலைக்குள் இருந்துக் கொண்டு கைதிகள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட முடியாதென பல குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றன. சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்புக் கூற வேண்டும். இது குறித்து அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது?

பதில்: இது இன்று நேற்றல்ல தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற ஒரு விடயம். இதனாலேயே இன்று சிறைச்சாலைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அலைபேசி உரையாடல்கள் மூலம் ஒத்துழைப்பு வழங்கிய சிறைச்சாலைகள் அதிகாரிகள் 6 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, இவர்களுக்கு எதிராகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கேள்வி: விசேட மேல் நீதிமன்றங்கள் எப்போது அமைக்கப்படும்?

பதில்: விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டுவிட்டது. நீதிமன்றக் கட்டட நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது அமைக்கப்பட்டிருக்கும் ஒரு நீதிமன்றத்துக்கான தற்காலிகக் கட்டடத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இன்னும் சில தினங்களில் விசேட நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதென அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.