கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் நவீனமயப்படுத்துவதற்கும் இலங்கை முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கி வழங்க முன்வந்துள்ளது.

இதற்கான கடன் ஒப்பந்தத்தில் இலங்கையும் உலக வங்கியும் கைச்சாத்திட்டுள்ளன. பொதுக் கல்வி நவீனமயப்படுத்தல் திட்டமானது General Education Modernization Project (GEM) இலங்கைச் சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களுடன் இணைந்ததாக பொதுக்கல்வியின் பாடவிதானங்களை நவீனமயப்படுத்துவதுடன் பல்வகைப்படுத்தும். பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியமானதாக கருதப்படும் ஆங்கிலம் மற்றும் கணிதம் போன்ற மூலோபாய பாடங்களுக்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும். க.பொ.த உயர்தரத்தில் தெரிவுகளை இந்தத் திட்டம் விரிவாக்கும். அந்தவகையில் மாணவர்கள் கலை, முகாமைத்துவம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்விப் பிரிவுகளில் இருந்து தமக்குப் பொருத்தமான பாடங்களை தேர்ந்தெடுக்கும் நெகிழ்வுத் தன்மையைக் கொண்டிருப்பார்கள்.

ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கான பாடவிதானங்கள் நவீன முறையில் கணனிகளுடாக பயன்படுத்தக்கூடியதாக விருத்திசெய்யப்படும். அதிகமாக பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த பாடசாலைகளைச் சேர்ந்த சிறுவர்கள் மீதே கவனம் குவிக்கப்படும். ”கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான சூழலை வியாபிப்பதில் இலங்கை சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இருந்தபோதிலும் அதிக அல்லது நடுத்தர வருமானம் உடைய நாடு என்ற ஸ்தானத்தை எட்டுவதற்கு ஒட்டுமொத்த ரீதியான கற்றல் வெளிப்பாடுகளை மேலும் முன்னேற்றவேண்டும்.

‘உயர் தரத்திலான பொதுக் கல்வி கட்டமைப்பானது 21ஆம் நூற்றாண்டின் தொழில் தேவைகளுக்கான கேள்வியை சந்திப்பதற்கு ஏற்ற வகையில் மாணவர்களை உருவாக்கும் என்பதில் இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.’ என இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் ஐடா ஸ்வராய் ரிடில்கொவ் தெரிவிக்கின்றார். கைச்சாத்திடப்பட்ட பொதுக் கல்வி நவீனமயப்படுத்தல் திட்டமானது பாடசாலை கல்விக் கட்டமைப்பை மாற்றியமைக்கும் திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட பாடங்களையும் அனுபவத்தையும் கொண்டு கட்டியெழுப்பப்படுவதுடன் பொதுக் கல்வித் துறைக்கான உலக வங்கியின் ஆதரவை வலுப்படுத்துவதாகவும் அமையும்.