மத்தல விமான நிலையம் இந்தியா வசமாவது, இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலெனக் குறிப்பிட்டுள்ள, ஜே.வி.பியின் ஊடகப்பேச்சாளரும் எம்.பியுமான, விஜித ஹேரத், ‘அந்த விமான நிலையம், இந்தியா வசமாவதை கடுமையாக எதிர்ப்போம்’ என்றார்.

‘மத்தல விமான நிலையத்தை, இலங்கை விமானிகளைப் பயிற்றுவிக்கும் தளமாகப் பயன்படுத்துவதே காலோசிதமான செயற்பாடாக அமையும்’ என்றும் அவர் குறிப்பிட்டார். ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், ‘துறைமுகங்கள், விமான நிலையங்கள் என்பன நாட்டின் தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்தும் அம்சங்களாகவே காணப்படுகின்றன. இதனால் அவற்றின் மீது, பிறநாடுகள் தலையீடுகளைச் செய்வதற்கு இடமளிக்ககூடாது’ என்றார்.

‘இலங்கையின் உள்ளக விவகாரங்களில் இந்தியா, பலவந்தமாகத் தலையீடு செய்தமைக்கான வரலாறுகள் உள்ளதை அறிந்திருந்தும், மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவ்வாறு இடம்பெறுமாயின், அது நாட்டின் தேசிய பாதுகாப்புக்குக் கடும் அச்சுறுத்தலாக அமையும்’ என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், ‘தற்போது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமும் தனியார் மயப்படுத்தப்படவுள்ளது. அதற்கான ஆவணங்களும் கைமாற்றப்பட்டுள்ளன. ஆனால், மேற்படிச் செயற்பாடுகளை முன்னெடுக்க சிவில் விமான போக்குரத்துச் சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். குறித்த சட்டத்திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் போது ஜே.வி.பி கடுமையான எதிர்ப்பை வெளியிடுமென அவர், மேலும் குறிப்பிட்டார்.

‘மத்தல விமான நிலையம், நட்டமீட்டுவதை அறிந்தும் இந்தியா அதனை பெற்றுக்கொள்கின்றது. இதனை இந்தியாவின் அக்கறையெனக் கருதமுடியாது. மாறாக அந்நாட்டின் தூரநோக்காகும் என்பதை உணர வேண்டும். இந்த விமான நிலையத்தை அண்மித்த நிலப்பரப்பிலேயே சீனா, பொருளாதார வலயங்களை உருவாக்குகின்றது. அவை இலாபமீட்டும் வகையில் மாற்றியமைக்கப்படும் போது, மத்தல விமான நிலையத்தை கொண்டு, இந்தியா பெருமளவில் இலாபமீட்டும்’ என்றார்.

அதேநேரம், மத்தல விமான நிலையத்தின் ஊடாக இலாபமீட்டும் நிலைமை ஏற்படும் வரையிலும், விமானிகளைப் பயிற்றுவிக்கும் தளமாக மாத்திரமே குறித்த விமான நிலையத்தை இந்தியா பயன்படுத்தும். அதனால், மத்தல விமான நிலையத்தை, இலங்கை விமானிகளுக்கான பயிற்றுவிப்புத் தளமாக வழிநடத்திச் செல்லவேண்டும்’ என்றார்.

எவ்வாறாயினும், ‘ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் 400 அமெரிக்க டொலர் மில்லியன் ரூபாயை கடனாகப் பெற்றுக்கொள்வதற்காகவே தேசிய சொத்துகள், வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதனால், மத்தல விமான நிலையம், இந்தியா வசமாவதைத் தடுப்பதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொள்வோம். மக்களையும் ஒன்று திரட்டி கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்’ என்றார்.