யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தான் மோசமாக நடத்தப்பட்டதாகக் கூறி, மாற்றுத்திறனாளியான கைதியொருவர், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

நீதிமன்றின் விளக்கமறியல் உத்தரவுக்கமைய, யாழ். சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளியே, யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிளிநொச்சி அலுவலகத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார். மாற்றுத்திறனாளியான, குமாரசாமி பிரபாகரன், முள்ளம்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர். அவருக்கு, இடுப்புக்கு கீழ் இயங்காது. அவ்வாறான மாற்றுத்திறனாளியான தனக்கு, சிறைச்சாலையில் அதற்குரிய எவ்வித ஏற்பாடுகளும் காணப்படவில்லை என்றும் மலசலம்கூட கழிக்க முடியாது, பெரும் அவஸ்த்தைபடுவதாகவும், இவை, தனது உரிமையைப் பாதித்துள்ளது எனவும் தனது, முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய ஆணையாளர் கனகராஜ் கூறுகையில், குமாரசாமி பிரபாகரன் என்பவரின் முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகவும், அது தொடர்பிலும், அரச மற்றும் பொது கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகும் வசதிகள் காணப்படுகின்றதா என்பது பற்றியும் கண்காணிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.