நேற்று வெள்ளிக்கிழமை காலை கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதம் மீது மன்னார் பகுதியில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை மாலை சராமாரியாகக் கற்கள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் குறித்த புகையிரதத்தின் கண்ணாடிகள் சேதடைந்ததுடன், சாரதிக்கும் சிறு காயம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கொழும்பிலிருந்து தலைமன்னார் நோக்கி நேற்று வெள்ளிக்கிழமை (27) காலை பயணித்த புகையிரதம் மீது, மாலை 6.15 மணியளவில் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி கரிசலுக்கும் ஓலைத்தொடுவாயுக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து இனம்தெரியாத நபர்களால் சரமாரியாகக் கற்களால் எறிந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது குறித்த புகையிரதம் சிறிது தூரத்தில் நிறுத்தப்பட்டது.

குறித்த தாக்குதலின் போது புகையிரதத்தின் எஞ்சின் கண்ணாடிகள் சேதமடைந்ததோடு, புகையிரதத்தின் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் உடனடியாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 15 வயதுடைய சிறுவன் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.