வடக்கு மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரனை, அந்த அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையுத்தரவுக்கு எதிராக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா, இல்லையா? என்பது தொடர்பில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதியன்று, இந்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள, உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்மானித்தது.இந்த மனு, உயர்நீதிமன்ற நீதியரசர்களான புவனெக்க அளுவிஹார, பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகிய மூவரடங்கிய குழு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், பரிசீலனைக்கான திகதியைக் குறித்த நீதியரசர்கள் குழு, அன்றைய தினம், இம்மனு தொடர்பான விடயங்களை முன்வைக்குமாறு, மனுதாரர் தரப்புச் சட்டத்தரணிக்கு அறிவித்தது.
கடந்த ஓகஸ்ட் மாதக் காலப்பகுதியில், தன்னை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் எடுத்தத் தீர்மானம் சட்டவிரோதமானதெனக் குறிப்பிட்டு, முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனால் முன்வைக்கப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கிமைக்கு எதிராக, இடைக்காலத் தடையுத்தரவு வழங்கியிருந்தது.
இந்த இடைக்காலத் தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ள முறைமையானது, சட்டத்துக்கு முரணானதெனக் குறிப்பிட்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வன், இவ்வாறானதொரு உத்தரவைப் பிறப்பிக்க, மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லையெனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையுத்தரவைக் கலைத்துவிடும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு வலியுறுத்தியே, உயர்நீதிமன்றத்தில், முதலமைச்சரால் மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.