(ஆர்.ராம்)
தனது அரசியல் நலனுக்காக முரணான கூற்றினை வெளிப்படுத்தி தவறான புரிதலை ஏற்படுத்துவதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எத்தனிப்பதாக புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தருமலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்து சொற்ப காலங்களிலேயே புளொட் அமைப்பிடம் இருக்கும் ஆயுதங்களை கையளிக்குமாறு எமக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அச்சமயத்தில் எமது அமைப்பு ஆயுதங்களை கையளித்து விட்டது. யுத்தத்தின் பின்னரான சூழலில் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டிய அவசியமும் எமக்கு இருக்கவில்லை. 2011ம் ஆண்டின் ஆரம்பத்தில் தான் புளொட் அமைப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்துகொண்டது.

இந் நிலையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிடுவது போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தமைக்கும் ஆயுதங்களை கையளித்தமைக்கும் எவ்விதமான தொடர்புகளும் கிடையாது. அவரைப் பொறுத்தவரையில் அரசியல் நலன்களுக்காக முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை முன்வைக்கின்றார் என்றார். (நன்றி வீரகேசரி)