வெளிக்கந்த சேனபுர பகுதியில் உள்ள போதைப் பொருள் பாவனையாளர்களுக்கான புனர்வாழ்வு முகாமிலிருந்து நேற்று இரண்டு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக வெளிக்கந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தப்பிச் சென்ற இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போதைக்கு அடிமையான நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கமைய குறித்த புனர்வாழ்வு மத்திய நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டவர்களென தெரியவந்துள்ளது. இதிலொருவர் அம்பலாங்கொட கஹச பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதானவரெனவும், மற்றையவர் பனாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதானவரெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த இரண்டு சந்தேகநபர்களும் நேற்றுமாலை 5.45 மணியளவில் முகாமிலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், இவர்களைத் தேடி விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிக்கந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.டபிள்யு. பிரேமலால் தெரிவித்துள்ளார்.