பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் பாகிஸ்தானின் சுதந்திரமான ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னர் பதவியேற்பார் என தெஹ்ரீக்–இ–இன்சாப் கட்சி அறிவித்துள்ளதாக சர்வசே ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

புதிய பிரதமராக பதவியேற்கும் இம்ரான்கானுக்கு ஏராளமான சவால்கள் காத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர். பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த 25 ஆம் திகதி தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் பிரதமரும், ஊழல் வழக்கில் சிறையில் இருப்பவருமான நவாஸ் செரீப்பின் முஸ்லிம் லீக் கட்சி, முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்–இ–இன்சாப் (பி.டி.ஐ.) மற்றும் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் போட்டியிட்டன. இதில் வெளியான முடிவுகளின்படி அதிகபடியான வாக்குகளை பெற்று இம்ரான்கானின் கட்சி பாகிஸ்தானில் புதிய அரசை அமைப்பது உறுதியாகியுள்ளது.