இலங்கையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தனது தாயாரை பார்க்கச் சென்ற இலங்கை தமிழர் ஒருவர் இரண்டாவது தடவையாகவும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை வனத்துறையினர் தீவுப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தபோது சிங்கிலி தீவு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் காணப்பட்ட நாட்டுப்படகினை சோதனை செய்தபோது குறித்த படகில் யாரும் இல்லாததால் தீவு பகுதி முழுவதும் வனத்துறையினர் சோதனை செய்தனர். இதன் போது குறித்த தீவில் மறைந்திருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் இலங்கைக்கு அகதிகளை அழைத்துச் செல்வதற்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அவர்களை மண்டபம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து அதிகாரிகள் விசாரணை செய்த போது இரண்டு அகதிகள் தீவு பகுதியில் மறைந்து இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து தீவு பகுதி முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது தீவு பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் சந்தேகத்திற்கு இடமாக 2 பேர் சுற்றி திரிவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் குறித்த இருவரையும் கைது செய்து மண்டபம் மெரைன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் விழுப்புரம் வெளிப் பதிவில் வசித்த சாயிசன் மற்றும் திருச்சி உறையூர் முகாமை சேர்ந்த ஜெயக்குமார் ஆகியோர் என்பதும் தெரியவந்தது. யாழ்பாணத்தில் சாயிசனின் தாயாருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவரைக் காண்பதற்காக சாயிசனும் அவரது நண்பர் ஜெயக்குமாரும் இலங்கைவர முயன்றபோது இலங்கையில் இருந்து தனுஸ்கோடி பகுதிக்கு வரவேண்டிய படகு வராததால் படகிற்காக தீவில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வனத்துறையால் கைது செய்யப்பட்ட சிவகுமார், பாஸ்கர் ஆகிய இருவரையும் விசாரணை செய்தபோது தமிழகத்தில் உள்ள அகதிகளை சட்ட விரோதமாக படகில் இலங்கைக்கு அனுப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளதாகவும், படகில் ஏற்றி செல்ல நபர் ஒருவருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ளுவதாகவும் தெரிவித்துள்ளனர்.