இலங்கை விமான சேவையில், புதிதாக சேவையில் ஈடுபடுத்தும் பொருட்டு இன்று (30), புதிய விமானம் ஒன்று சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.

சர்வமத வழிபாடுகளை தொடர்ந்து, எயார் பஸ் நிறுவனத்தின், ஜேர்மன் ஹெம்பர்க் தொழிற்சாலையினால் உற்பத்தி செய்யப்பட்ட, A-321neo ரக விமானமே இவ்வாறு சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. எரிபொருள் மற்றும் காற்று எதிர்ப்பைக் குறைத்து பறக்கக்கூடிய வகையில் புதிய நிர்மாணிப்பதாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 146 அடியும், இறக்கைகள் 117.5 அடியையும் கொண்டுள்ளதுடன், உயரம் 37.7 அடியென தெரிவிக்கப்படுகிறது. சுமார் 176 பயணிகளும், 6 விமான சேவை பணியாளர்களும் இதில் பயணம் செய்யக்கூடியவாறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

குறித்த விமானம் நேற்றையதினம், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த விமானத்தை, சுமார் 3 மணித்தியாலங்களில் பயணம் செய்யக்கூடிய சீனா, டுபாய் போற்ற நாடுகளுக்கு பயணம் செய்வதற்காக பயன்படுத்த உள்ளதாக, இலங்கை விமான சேவைகள் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரரா தெரிவித்துள்ளார்.