யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் 1 மணி வரையிலான 24 மணி நேரத்துக்குள், ஆறு வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை வட-கிழக்கு கிராம அலுவலர் அடையாளம் தெரியாத குழு ஒன்றினால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாள் மற்றும் கம்பிகளுடன் 4 உந்துருளிகளில் அவரது அலுவலகத்துக்குப் பிரவேசித்த எட்டு பேர் கொண்ட குழு ஒன்று அவரை அச்சுறுத்தியதுடன், அவரது முச்சரக்கரவண்டி, மடிகணினி, கைப்பேசி உள்ளிட்ட உடைமைகளையும் சேதப்படுத்தியுள்ளது. இன்று நண்பகல் 12.20 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட கிராம அலுவலகரான பி.ஆர்.ஜேசுதாசன் சம்பவம் தொடர்பில் ஊடகங்களிடம் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

இதேவேளை, கொக்குவில் பகுதியிலும், எட்டு பேர் கொண்ட குழு ஒன்று வீடொன்றின் மீது இன்று பிற்பகல் 1 மணி அளவில் தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிற்றூர்ந்து ஒன்றுக்கும் அவர்களால் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் இயங்குவதாக கூறப்படும் ஆவா குழுவின் தற்போதைய தலைவராக கூறப்படும் அசோக்குமார் என்ற, அசோகனின் வீடும் மேலும் 3 பேரின் வீடுகளுக்கு நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நான்கு உந்துருளிகளில் பிரவேசித்த குழுவினரே இந்த தாக்குதல்களை நடத்தியதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.