யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி பிரதேசத்தில் படகொன்றும் அதன் வெளியிணைப்பு இயந்திரம் ஒன்றும் இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு கொழுத்தபட்டுள்ளது.

தாளையடி பகுதியில் கரையில் விடப்பட்டு இருந்த படகுக்கும் அதன் இயந்திரத்திற்கும் நேற்று இனம் தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். அதனால் படகும் அதன் இயந்திரமும் முற்றாக எரிந்து நாசமாகி உள்ளது. தென்னிலங்கை மீனவர்கள் வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் கடலட்டை பிடிக்கும் தொழில் செய்வதற்கு உள்ளூர் மீனவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எரிக்கப்பட்ட படகின் உரிமையாளரும் தென்னிலங்கை மீனவர்கள் கடலட்டை பிடிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்த தென்னிலங்கை மீனவர்களை சுற்றி வளைத்து பிடித்து கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கையளித்த வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவரின் படகும் கடந்த வாரம் இனம் தெரியாத நபர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.