ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டம், வடமாகாண சபையின் அமைச்சரும், கட்சியின் பொருளாளரும், முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளருமான க.சிவநேசன் (பவன்) தலைமையில் 29.07.2018அன்று முல்லைத்தீவில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களுடன், கட்சியின் முல்லைத்தீவு மாவட்டம் சார்ந்த உள்ளுராட்சிமன்ற தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.

தற்போதைய அரசியல் சூழ்நிலை, கலைக்கப்படவுள்ள வட மாகாண சபையின் எதிர்காலம், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தமது சேவைகளை வழங்கும் முறைமைகள், கட்சியின் செயற்பாடுகளை பொதுமக்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் செயற்பாடுகள், முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்பகுதியில் அதிகரித்து வரும் திட்டமிடப்பட்ட சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டன.மேலும், கட்சியின் கட்டமைப்பினை, பிரதேச சபை மற்றும் உள்ளுராட்சிமன்ற வட்டார மட்டம் வரையிலும் கொண்டு செல்வதெனவும், அதற்கேற்ப சகல மட்டங்களிலும் கட்சியின் நிர்வாகக் குழுக்களை சீரமைப்பதெனவும், புதிதாக அமைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் கட்சியின் வளர்ச்சிக்காக மக்கள் பிரதிநிதிகளாக செயற்படும் அனைவரும் தம்மாலான பங்களிப்பினை தொடர்ச்சியாக வழங்குவதற்கான ஒப்புதலையும் வழங்கியிருந்தனர்.