யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் தாலிக்கொடியை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அறுத்து சென்றுள்ளனர். மல்லாகம் பகுதியில் நேற்று மாலை வீதியால் சென்றுகொண்டிருந்த பெண்ணை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அவரது தாலிக்கொடியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில், தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை கொக்குவில் பகுதியில் இலக்கத் தகடுகள் துணியால் மறைத்துக் கட்டப்பட்ட நிலையில் வீதியில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நேற்று யாழ். பொலிஸார் மீட்டுள்ளனர்.

கொக்குவில் ஞான பண்டிதா பாடசாலைக்கு அண்மையில் வீடொன்றுக்குள் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல், அங்கு ஹஏஸ் வாகனத்துக்கு தீவைத்துவிட்டு அங்கிருந்த பொருள்களைச் சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டதாக தெரியவந்துள்ளது.

குறித்த வன்முறையை அரங்கேற்றிவிட்டுத் தப்பித்த கும்பலின் மோட்டார் சைக்கிளாக இது இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வீதியில் விபத்து ஏற்பட்டதும் மோட்டார் சைக்கிளை கைவிட்டுத் தப்பித்திருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.