வவுனியா தட்டான்குளத்தில் விசத்தண்ணீரை அருந்தியதன் காரணமாக நான்கு மாடுகள் இறந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் உயிருக்கு போராடிய இரண்டு மாடுகள் கிராம மக்களின் முயற்சியால் காப்பற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு மாடுகளுக்கு விசம் கலந்த தண்ணீரை கொடுத்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். இறந்த மாடுகளை பரிசோதனை செய்த செட்டிக்குளம் அரச கால்நடை வைத்திய அதிகாரி மாடுகளுக்கு விசம் கலந்த நீர் கொடுக்கப்பட்டதை உறுதி செய்துள்ளதுடன், உயிருக்கு போராடிய இரண்டு மாடுகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் கிராம மக்கள் தெரிவிக்கையில், நாங்கள் தட்டாங்குளத்தில் குடியேறி 11 வருடங்களாக வாழ்ந்து வருகிறோம்.

நாங்கள் விவசாயம் செய்வதற்கு நிலங்கள் இல்லாத காரணத்தால் மாடுகளை வளர்த்து அதன் வருமானத்திலேயே எங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம். எமது பிள்ளைகளை போல் வளர்த்த எங்கள் மாடுகள் விசம் வைத்து கொல்லப்பட்டுள்ளது.

இப் பசுக்களை நம்பியே எமது வாழ்வாதாரமும் அமைந்துள்ளது. கடும் வறட்சியின் காரணமாக தண்ணீர் குடிக்கச் சென்ற குட்டி போடவிருந்த மாடுகளுக்கும் விச நீர் கொடுத்து கொன்றுள்ளனர் இறந்த மாடுகளின் பெறுமதி ஐந்து லட்சம் என தெரிவித்துள்ளனர்.