முல்லைத்தீவு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலையினை பயன்படுத்துபவர்களது அனுமதியினை இரத்து செய்வது தொடர்பில் கடந்த 24 ஆம் திகதி மீனவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று மாத்தளன் கடற்பகுதியில் இருந்து நான்கு படகுகள் சுருக்கு வலையினை பயன்படுத்தி தொழில் நடவடிக்கைக்கு புறப்பட்டுள்ளார்கள். இவ்வாறான சுருக்குவலை பயன்பாட்டால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பேப்பாரப்பிட்டி தொடக்கம் கொக்குத்தொடுவாய் வரையான கடலை நம்பி வாழும் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.இந்நிலையில் நேற்று உடனடியாக குறித்த சுருக்குவலை பயன்பாட்டினை தடைசெய்யகோரிய கடற்தொழில் அமைப்புக்களை சேர்ந்தவர்கள் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திற்கு சென்றுள்ளார்கள். இதன்போது அங்கு குறித்த அதிகாரி இல்லாத காரணத்தால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு சென்று அங்கு பொலிஸ் அதிகாரியுடன் தங்கள் பிரச்சினைகளை முறையிட்டுள்ளார்கள்.

இதற்கு பொலிஸார் தடைசெய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி தொழில் செய்யும் நடவடிக்கையினை கடற்படையினருடன் இணைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

தொடர்ந்து மீனவர்கள் வெட்டுவாகல் பகுதியில் உள்ள கோட்ட பாயகடற்படை முகாம் அதிகாரியினை சந்திக்க சென்றுள்ளார்கள். அங்கு அதிகாரி இல்லாத காரணத்தால் மீண்டும் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள உதவிப்பாணிப்பாளரை சந்தித்து தங்கள் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்கள்.

இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் அமைப்பின் தலைவர் ஜெயா அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது, கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் சுருக்குவலை பயன்பாட்டிற்கு தொடங்கியுள்ளார்கள் .
இது தொடர்பில் கதைப்பதற்காக நீரியல் வள திணைக்களத்துக்கு சென்றோம் அங்கு அவர் இது தொடர்பில் நான் முடிவெடுக்கமுடியாது என்றும் கடற்தொழில் அமைச்சின் மூன்றாவது நிலையில் உள்ள அதிகாரி ஒருவர் தொலைபேசி மூலம் சுருக்குவலைக்கான அனுமதியினை வழங்குமாறு பணித்துள்ளார்.

பணிப்பாளர் நாயகம் நாட்டில் இல்லாத காரணத்தால் ஆறு நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார்கள். வெகுவிரைவில் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திற்கு எதிராக பாரியளவிலான ஆர்ப்பாட்டம் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.