திருகோணமலை கன்னியா காயத்திரி அம்மன் கோயில் வீதிக்கு பின்னாலுள்ள காட்டுப்பகுதிக்குள் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கன்னியா காட்டுப்பகுதிக்குள் விறகு சேகரிக்க சென்ற நபர் ஒருவர், 119 என்ற காவல்துறை அவசர அழைப்பு இலக்கத்திற்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. மரத்தில் தொங்கிய நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் அணிந்திருந்த சட்டைப் பையிலிருந்து திருகோணமலையிலிருந்து கன்னியாவிற்கு கடந்த மாதம் 10ஆம் திகதி பெற்றுக்கொள்ளப்பட்ட பேருந்து பயணச் சீட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.