முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி தொழிலை உடனடியாக நிறுத்துமாறு கோரி ஆயிர்க்கணக்கான மீனவர்கள், மக்கள் என பலர் திரண்டு இன்றுகாலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம் முன்பாக ஆரம்பமான பேரணி, முல்லைத்தீவு பொதுச்சந்தை வழியாக நகரை சென்றடைந்து, அங்கிருந்து மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தினை சென்றடைந்தது. அங்கே சென்ற மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடியை தடைசெய்யுமாறு கோரி கோஷங்களை எழுப்பியதுடன் நீரியல் வள திணைக்கள உதவிப் பணிப்பாளர் தம்மை சந்திக்க வேண்டும் என நீண்ட நேரமாக காத்திருந்தனர்.மிக நீண்ட நேரம் காத்திருந்த மக்களை எவரும் சந்திக்காத நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் பொலிஸாரின் தடையையும் மீறி வேலிகளை உடைத்து திணைக்களத்தினுள் புகுந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, 

முல்லைத்தீவு மீனவர்களிடையே காணப்படும் சுருக்குவலை மீன்பிடி முறையினை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தகுந்த நடவடிக்கையினை உடனடியாக எடுக்குமாறு கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பில் குறிப்பாக சுருக்குவலை மீன்பிடியில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய கடற்தொழிலாளர்களுக்கிடையில் காணப்படும் பிரச்சனைகள் குறித்து எதிர்வரும் 08.08.18 அன்று முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அலுவலக மண்டத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்கூட்டத்திற்கு கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சா மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் இதில் மீனவ அமைப்புக்களை சார்ந்த 10 பிரதிநிதிகளை கலந்துகொள்ள ஏற்பாடு செய்யுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த கலந்துரையாடல் நடைபெற்று உரிய தீர்மானம் எடுக்கும் வரை மீனவர்களிடையே காணப்படும் சுருக்குவலை மீன்பிடி முறையினை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தகுந்த நடவடிக்கையினை உடனடியாக எடுக்குமாறும் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.