அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், இன்று காலை 8 மணிமுதல் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக, வைத்திய சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக, கொழும்பு தேசியை வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சமிந்தி சமரகோன் தெரிவித்துள்ளார்.

வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பால், குறிப்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட அனைத்து வைத்தியசாலைகளினதும் வெளிநோயாளர் பிரிவு, சிகிச்சை பிரிவு அனைத்தும் முடங்கியதால், நோயாளர்கள் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர். சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைகளுக்கு வந்த நோயாளர்கள், வைத்திய விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியர்களின் சேவை நேரக் கொடுப்பனவு, சிங்கப்பூர் உடனான வர்த்த ஒப்பந்தம், மருத்துவர்களுக்கான வாகன சலுகை, வைத்தியத் துறையின் மீது அதிக வரி விதித்தல், வைத்தியர்களின் பிள்ளைகளுக்கான பாடசாலைகளைப் பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட காரணங்களை முன்னிலைப்படுத்தி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், இன்று காலை முதல் 24 மணித்தியால் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.