கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியற்பீட கட்டிடத் தொகுதி, மாணவர் விடுதி மற்றும் ஊழியர் விடுதி என்பவற்றின் திறப்புவிழா நேற்று முற்பகல் 11.30அளவில் இடம்பெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள்,

5ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று கட்டிடங்களையும் திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து பொறியியற்பீட கட்டிடத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் விசேட கூட்டமொன்றும் இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள், யுத்த காலத்தில் இப்பிரதேசத்தினை எங்களால் அபிவிருத்தி செய்ய முடியாமற் போயிருந்தது. ஆனால் முன்னாள் ஜனாதிபதி காலஞ்சென்ற பிரேமதாஸ அவர்கள் 90ஆம் ஆண்டில் வவுனியாவில் இணைந்த பல்கலைக்கழகம் நிறுவினார். அதற்குப் பின்பு எம்மால் செய்யமுடியாமற் போயிருந்தது.
5ஆயிரம் மில்லியன் ரூபாவை இந்த மூன்று வருடத்திற்குள்ளேயே செலவிட்டு அறிவியல் நகரில் இருக்கக்கூடிய இந்த பல்கலைக்கழக பீடத்தை ஒரு தலைசிறந்த பீடமாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றோம். ஒரு காலத்தில் வட மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்துதான் சிறந்த பொறியியலாளர்கள் வந்தார்கள். மற்றையவர்கள் குறைநினைக்கக் கூடாது. ஆயினும் உண்மை, அன்று யாழ்ப்பாண காட்லிக் கல்லூரிதான் தலைசிறந்த கல்லூரியாக இருந்தது. ஆகவே, இந்தப் பல்கலைக்கழகத்தினை இயன்ற அளவு மேலும் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என்றார்.

இந்நிகழ்வில் உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, அமைச்சின் செயலாளர் மொஹான் டீ சில்வா, உப செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், விஜயகலா மகேஸ்வரன், பொலிஸ் மாஅதிபர் என்.கே. இலங்ககோன், வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம், வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன், பல்கலைக்கழக உபவேந்தர் விக்னேஸ்வரன், முன்னாள் உபவேந்தர் வசந்தி அரசரட்ணம், பேராசிரியர்கள், விரைவுரையாளர்கள், அதிகாரிகள், மாணவர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.