கலைஞர் கருணாநிதி ஐந்து தடவைகள் முதலமைச்சராகவும் நீண்டகாலம் கட்சித் தலைவராகவும் பரிணமித்திருந்த போதிலும் அவரது தமிழ் பற்றும் அவரது தமிழ் அறிவும் தமிழ் மக்களால் என்றென்றும் மறக்க முடியாதவையாகும் என்று புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

மறைந்த கலைஞர் கருணாநிதிக்கும் தமிழ் போராளிக்குழுக்களுக்கும் இடையிலான உறவு தொடர்பில் அவரிடம் கேட்டபோதே சித்தார்த்தன் இவ்வாறு விபரித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

போராட்டக்காலத்தில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்குமிடையில் அரசியல் வேறுபாடுகள் காணப்பட்டன. இந்த வேறுபாடுகள் தமிழ் போராட்ட இயக்கங்கள் மத்தியிலும் பிரதிபலித்தமை உணரப்பட்டது. எங்களைப் பொறுத்தமட்டில் அங்குள்ள அரசியல் ஈடுபாடோ தலையீடோ இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். நாம் நட்புறவுடன் செயற்பட்டோம். கலைஞருடன் நாம் நட்பை பாராட்டி வந்தோம்.

திம்பு பேச்சுவார்த்தைக்கு நாம் சென்றபோது கலைஞரை சந்தித்து நான் தனிப்பட்ட முறையில் ஆலோசனை கேட்டிருந்தேன். தமிழீழ கோரிக்கை உச்சக்கட்டத்தில் இருந்த நேரம் அது. அவரிடம் நான் ஆலோசனை கேட்டபோது தமிழீழக் கோரிக்கையினை கைவிடவேண்டாம்.

இலங்கை அரசாங்கத் தரப்பினர் குறைந்த தீர்வைத்தான் தருவதற்கு முயற்சிப்பார்கள். எனவே, நீங்கள் விட்டுக்கொடுக்கக்கூடாது. இலங்கை அரசாங்கத்தரப்பினர் ஒருபடி கீழ் இறங்கி வந்தால் நீங்களும் நியாயமான தீர்வினை கோரமுடியும் என்றார்.

ஈழத்தமிழர்களுக்கு நிம்மதியான தீர்வு ஏற்படவேண்டும் என்பதில் அவர் அக்கறை காட்டினார். அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு பக்கச்சார்புடையவர் என கூறப்பட்டாலும் தமிழ் தேசியவாதி என்ற வகையில் அவரை பாராட்டலாம் என்றார். (நன்றி வீரகேசரி: 09.08.2018)