தமிழகத்தின் முன்னைநாள் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான கலைஞர் கருணாநிதி இழப்பால் துயருற்றுள்ள கோடான கோடி தமிழ் மக்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்களுடன் நாமும் துயரினை பகிர்ந்துகொள்கிறோம்.

எமது விடுதலை போராட்டம் முளைவிட்ட காலம் தொட்டு எமக்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கிய முக்கிய தலைவர்களில் கலைஞரும் ஒருவர். அன்று எம்மை வரவேற்று எமக்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கிய குறிப்பாக தமிழகத்திற்கு ஏதிலிகளாக இடம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் கல்வி மேம்பாட்டிற்கு நல்கிய உதவியை எம்மால் மறந்துவிட முடியாது. எமக்குள் ஏற்பட்ட சகோதர முரண்பாடுகளால் மனமுடைந்த கலைஞர் அவர்கள் இதனை கைவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுமாறு கோரியிருந்தவர். கலைஞரின் இவ் கருத்தை நாமும் கவனத்தில் கொண்டிருந்தால் ஈழத்தமிழினத்திற்கு இந்த அவலம் ஏற்பட்டிருக்காது என்பதும் வரலாறாகி சென்றுள்ளது.
ஈழத்தமிழர் விடுதலைக்காக பல்வேறு உதவிகளை தமிழக மக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் வழங்கிவந்த நிலையிலும், கலைஞர் கருணாநிதியோ இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளையும் கூட்டி மாபெரும் மகாநாட்டினை(ரெசோ) நடாத்தி அவ் மகாநாட்டில் ஈழத்தமிழ் போராளி அமைப்புக்களையும் பங்குபற்றவைத்து இந்தியாவின் அனைத்து கட்சிகளிற்கும் ஈழத்தமிழர் போராட்டத்தின் நியாயத்தை எடுத்துக்கூறி எமது இனத்தின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவை கோருவதற்கு வித்திட்டவர் ஆவார்.

விடுதலை போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் தாங்கள் வழங்கிய தார்மீக ஒத்துழைப்பில் எந்த இடர்களும் போராளி அமைப்புகளிற்கு ஏற்படவில்லை, இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை தொடர்ந்து தமிழகத்தில் இருந்த விடுதலை அமைப்புகள் தாயகம் திரும்பியபோது நேரில் வந்து ஆசிபெற்று தமிழக மக்களும் தாங்களும் வழங்கிய ஆதரவுக்கு நன்றி கூறி விடைபெற்று சென்ற ஈழ போராட்ட தலைவர் தம்பி முகுந்தன் (செயலதிபர் தோழர் உமாமகேஸ்வரன்) மட்டுமே, என்று கலைஞர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியிருந்தது இன்றும் எங்கள் உள்ளத்தில் உறைந்து கிடக்கின்றது.

கலைஞர் கருணாநிதி அவர்கள் எமது போராட்டத்திற்கும் விடுதலைக்கும் வழங்கிய ஆதரவு போன்று தொடர்ந்தும் திராவிட முன்னேற்ற கழகமும் அதன் முக்கியஸ்தர்கள், தொண்டர்கள் வழங்கவேண்டும். இதனை தி.மு.க வின் புதிய தலைமை தொடரும் என்று கருதுகின்றோம். தமிழுக்கும் அதன் ஆளுமைக்கும் ஈழத்தமிழரின் நலன்களுக்காகவும் கலைஞர் கொடுத்த ஆதரவினை ஈழத்தமிழர் மறந்துவிடலாகாது. தமிழுக்கும் ஈழத்தமிழர் உரிமைக்காகவும் கலைஞர் ஆற்றியபணி அளப்பரியது. உலகில் பல்வேறு மொழிகள் தமது தனித்துவத்தை இழந்து அருகிவருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்ற நிலையில், தமிழ்மொழியை செம்மொழியாக்கிய பெருமைக்குரியவர். இவ் பெருமைகளிற்கும் அர்ப்பணிப்புகளிற்கும் சொந்தக்காரரான கலைஞரின் உயிர் தமிழ் உள்ளவரை வாழும் என்று கூறி எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்.

செல்லத்துரை ஜெகநாதன்
சர்வதேச விவகார இணைப்பாளர்
தமிழீழ மக்கள் விடுதலை கழகம் – புளொட் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
09.08.2018.