மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியான ஈடுபாடு இல்லை என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தலை நடத்துவதற்கு பொது தீர்மானத்தை எடுக்கவில்லை எனவும் பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் உத்தியோகபூர்வ காலம் கடந்த வருடம் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் முடிவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் தற்போது குறித்த மாகாணங்கள் ஆளுனரின் கட்டுப்பாட்டிற்கு கீழ் இருப்பதுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி மத்திய மாகாணத்தினதும், 10 ஆம் திகதி வடமேல் மானாணத்தினதும், 24 ஆம் திகதி வட மாகாணத்தினதும் உத்தியோகபூர்வ காலம் முடிவடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆகும் போது அனைத்து மாகாண சபைகளிலும் தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் அண்மையில் அறிவித்திருப்பினும் இதுவரையில் அது தொடர்பில் எந்தவொரு கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை என பெப்ரல் தெரிவிக்கின்றது.

இம்முறை வாக்காளர் பட்டியலில் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி கையொப்பமிட உள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்துள்ளார். இம்முறை வாக்களர் பட்டியலின் திருத்தங்கள் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் பின்னர் திருத்தங்கள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.