வெலிக்கடை சிறைச்சாலையின் கூரைமேல் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் சிறைக்கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் பாதுகாப்பாக கீழிறக்கி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

வெலிகடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவுக்குரிய சிறைக்காப்பாளரை (ஜெய்லர்) இடமாற்றம் செய்தமை தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்திய பெண் சிறைக்கைதிகள், அவரை மீண்டும் பணியில் அமர்த்துமாறு கோரியும், வெளியிருந்து சிறைக்கைதிகளுக்கு கொண்டுவரப்பட்ட உணவுகளை மட்டுப்படுத்துவதாக கூறப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதன்போது, அவர்கள் தமது வழக்குகள் இதுவரையில் நீதிமன்றில் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை மற்றும் தமக்கு பிணையில் செல்ல அனுமதிக்கவில்லை எனவும் கோஷம் எழுப்பியே இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதனால் வெலிக்கடை சிறைச்சாலை சூழல் சற்று பதற்ற நிலையில் காணப்பட்டது. எனினும் இப் பிரச்சினை தீவிர நிலையை அடையமுன் சிறைச்சாலை அதிகாரிகளினால் நிலைமை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு கைதிகள் அனைவரும் கூரையிலிருந்து பாதுகாப்பாக கீழிறக்கப்பட்டனர்.

இப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் சிறைக்கைதிகளில் அதிகளவானோர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிறை பிடிக்கப்பட்டவர்கள் எனவும் இவர்கள் சிறைச்சாலைக்குள் இருந்து கொண்டு போதைப் பொருள் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் வெலிகட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.