செஞ்சோலை படுகொலையின் 12ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 2006 ஒகஸ்ட் 14ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 54 மாணவர்களும் 4 பணியாளர்களும் உயிரிழந்தனர்.

இந்த படுகொலை இடம்பெற்ற வள்ளிபுனம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களது திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டு விசேடமாக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவுகள் மற்றும் அரசியல்வாதிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை, செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் 12ஆம் ஆண்டு நினைவு அனுஷ்டிப்பு யாழ் பல்கலைகழகத்தில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், செஞ்சோலை படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.