லிபியா முன்னாள் ஜனாதிபதி கடாபியின் ஆதரவாளர்கள் 45 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

2011 ஆம் ஆண்டு அரபு நாடுகள், ஆப்பிரிக்காவின் வடபகுதி நாடுகள் ஆகியவற்றில் திடீர் புரட்சி ஏற்பட்டது. இதில் சில நாடுகளில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. சில நாடுகள் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டன. லிபியா நாட்டில் நீண்ட காலமாக முகமது கடாபி ஆட்சியில் இருந்து வந்தார். அங்கும் புரட்சி ஏற்பட்டது. புரட்சியாளர்கள் நாட்டை கைப்பற்றிக் கொண்டனர். கடாபி புரட்சிக்கும்பலிடம் சிக்கினார். அவர்கள் அவரை அடித்து கொன்றார்கள். ஜனாதிபதிக்கு எதிராக திரிபோலி நகரில் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது அவர்களை ஒடுக்குவதற்கு ராணுவமும், கடாபியின் ஆதரவாளர்களும் கடும் தாக்குதலில் ஈடுபட்டார்கள்.

இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இவ்வாறு கடாபிக்கு ஆதரவாக செயல்ப்பட்டவர்கள் மீது புதிய ஆட்சியாளர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். புரட்சியின் போது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய கடாபியின் ஆதரவாளர்களை கைது செய்தனர். அதில் 128 பேர் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டது.

அவர்கள் மீதான வழக்கு திரிபோலி நீதிமன்றில் நடந்து வந்தது. அதில் 99 பேருடைய குற்றம் உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 45 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது மற்றவர்களுக்கு பல்வேறு விதமான சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.