கத்தார் நாட்டிற்கு தொழில் நிமித்தம் சென்றவர்களில் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 19 பேரின் சடலங்கள் ஏற்கனவே நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு இறுதிக் கிரியைகள் நிறைவடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் வெளிநாட்டுறவுகள் பிரிவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் உயிரிழந்த இருவருடைய சடலங்கள் இதுவரையில் நாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை எனவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார். கண்டி – உடிஸ்பத்துவ பகுதியைச் சேர்ந்த ஒருவரின் சடலமும் கலேவல பகுதியைச் சேர்ந்த ஒருவரின் சடலமும் இதுவரையில் நாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. கத்தாரில் சாரதியாகப் பணிபுரிந்த, கண்டி – உடிஸ்பத்துவ பகுதியைச் சேர்ந்த 50 வயதான யூ.பி. மொஹமட் பாயிஸ் என்பவர் கடந்த 11 ஆம் திகதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இவர் தொடர்பில் கடந்த 14 ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கத்தாரில் சாரதியாக பணிபுரிந்த, கலேவல பகுதியைச் சேர்ந்த 34 வயதான அசங்க பிரேமரத்ன என்பவர் கடந்த மாதம் 26 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

மாடிக் கட்டடம் ஒன்றின் 3ஆம் மாடியிலிருந்து குறித்த நபர் கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இவரின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளமையால் தொடர் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரின் சடலங்களும் இதுவரையில் நாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் வெளிநாட்டுறவுகள் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.